கொரோனா 2வது அலையின்போது 58 நாளில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பு: ஒன்றிய அமைச்சர் தகவல்

டெல்லி: கொரோனா இரண்டாவது அலையில் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து மாநிலங்களவையில் ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், ‘கொரோனா இரண்டாவது அலையில் கடந்த ஏப்ரல் முதல் மே 28ம் தேதிவரையிலான 58 நாட்களில் நாட்டில் 645 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 158 குழந்தைகளும், ஆந்திராவில் 119 குழந்தைகளும், மகாராஷ்டிராவில் 83 குழந்தைகளும், மத்தியப்பிரதேசத்தில் 73 குழந்தைகளும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பள்ளி கல்வித்துறை, கல்வித்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து, கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வியை தொடர்ந்து வழங்கிட வேண்டும், பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிட வேண்டும் என மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் அனைத்து அமைச்சகங்களும் இணைந்து கேட்டுக்கொண்டுள்ளோம். இதுதவிர கரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் நலனுக்காக பிரதமர் மோடியும் சிறப்பு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைக்கு 18 வயதுவரை இலவச கல்வி, சுகாதார வசதிகளும், ரூ.10 லட்சம் வைப்பு நிதியும் வழங்கப்படும். 18 வயது வரை ரூ.10 லட்சத்திலிருந்து கிடைக்கும் வட்டி அந்த குழந்தையின் பராமரிப்புக்கு பயன்படும், 18 வயது நிறைவடைந்தபின், அந்த குழந்தையின் உயர்கல்விக்கும், 23 வயதுக்குப்பின் அந்த குழந்தையின் தனிப்பட்ட வளர்ச்சி அல்லது தொழில் தொடங்கவும் பயன்படுத்தப்படும்’ என்றார்.

Related Stories: