சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குடிசை மாற்றுவாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சேலம்: சேலத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் உட்பட பலருக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இல்லாத நபர்களுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து அவர்கள் பெயரில் இந்த மோசடி நிகழ்ந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே கான்கிரீட் வீடு உள்ளவர்களுக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 14,70,000 ரூபாய் ஒதுக்கீடு செய்து முறைகேடு செய்திருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் சேலம் லஞ்சஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் தாமாக முன்வந்து குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் ரவிக்குமார், ஜெயந்திமாலா ஆகியோர் மீதும் அதேபோல் உதவி பொறியாளர்கள் சரவணன், சீனிவாசன் ஆகிய 4 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.

கடந்த 2017 - 2019ம் ஆண்டு வரை பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதில் இந்த முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முறைகேடு செய்த பணத்தை அதிகாரிகள் 4 பேரும் பங்கிட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories: