காற்றுடன் சாரல் மழை குளிரால் மக்கள் பாதிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை தீவிரமடைந்துள்ளது.  சாரல் மழை மற்றும் காற்று வீசுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த சமயங்களில் எந்நேரமும் சூறாவளி காற்று வீசும். மேலும், சாரல் மழை பெய்துக் கொண்டே இருக்கும். இந்த மழையால் அனைத்து நீர் ஆதாரங்களிலும் தண்ணீர் அளவு அதிகரிக்கும். அதேபோல், தேயிலை விவசாயம் மற்றும் மலை காய்கறி விவசாயமும் அதிகரிக்கும்.

இந்நிலையில், இம்முறை கடந்த மாதம் மழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. பெரும்பாலான நாட்கள் வெயில் சுட்டெரித்தது.  கடந்த மாதம் இறுதி முதல் லேசான சாரல் மழை பெய்ய துவங்கியது. தென்மேற்கு பருவகாற்று தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, கூடலூர், பந்தலூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் மழை சற்று தீவிரமடைந்துள்ளது.

ஊட்டி அருகே உள்ள நடுவட்டம், கிளன்மார்கன், பைக்காரா போன்ற பகுதிகளில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டியில் எந்நேரமும் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், மேக மூட்டமும் காணப்படுகிறது. இதனால், குளிர் அதிகரித்துள்ளது. மேலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 14 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 10 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்): ஊட்டி 3, நடுவட்டம் 22, கிளன்மார்கன் 22, குந்தா 10, அவலாஞ்சி 49, எமரால்டு 17, அப்பர்பவானி 24, கூடலூர் 21, ேதவாலா 25, பந்தலூர் 44.

Related Stories: