6 மாதமாக சீரமைக்கப்படாத மின்கம்பங்கள் இருளில் மூழ்கிய வெள்ளக்கோயில் சாலை

நெல்லை : பாளை வெள்ளக்கோயில் சாலையில் மழையின் போது மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்து கடந்த 6 மாதங்களாக  சீரமைக்காத நிலையில் அப்பகுதி இருளில் மூழ்கிவருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  பாளை முருகன்குறிச்சியில் இருந்து வெள்ளக்கோயிலுக்கு செல்லும் சாலை பயன் உள்ளதாக திகழ்கிறது. பாளை பகுதியில் இறந்தவர்களின் உடல்களை இச்சாலை வழியாக கொண்டுசெல்கின்றனர். அப்பகுதி விவசாய நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்லவும் இச்சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 மேலும் திருவண்ணநாதபுரம் பொட்டல் பகுதி மக்கள் பாளை பகுதிக்கு வர இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இச்சாலையின் இருபுறத்திலும் காணப்படும் வயல்கள் பகலில் கண்களுக்கு மிகவும் விருந்தளிக்கும். இதனிடையே இரவு நேரத்தில் வெள்ளக்கோயிலுக்கு இறந்தவர்கள் உடலை கொண்டு செல்லவும், அதிகாலை நேரத்தில் வயல்களுக்கு விவசாயிகள் வந்து செல்லவும் சாலை ஓரத்தில் 20க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் மின்னொளியில் இரவு நேரத்தில் பொதுமக்கள் இரு சக்கரவாகனம், கார்களில் இச்சாலையில் பயணித்துவந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன் பெய்த காற்றுடன் கூடிய கனமழையில் வெள்ளக்கோயில் சாலையில் உள்ள பெரிய மரம்  மின்சார வழித்தடத்தில்  சாய்ந்து விழுந்தது. இதையடுத்து சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது. ஆனால் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வெள்ளக்கோயில் செல்லும் சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மீண்டும் மின் இணைப்பு வழங்கி விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது மின் கம்பங்கள் மட்டும் காட்சி பொருளாக காணப்படுகிறது. இதனால் மின்கம்பிகள் அறுந்து தொங்குகிறது. இதில் மின் சப்ளை இல்லாத காரணத்தால் விபத்துக்கள் நிகழ வாய்ப்பில்லை. மேலும் 10 மின் கம்பங்களில் விளக்குகள் இன்றி வெள்ளக்கோயில் சாலை இருளில் மூழ்கிவருகிறது.

கடந்த 6 மாதங்களாக மின்கம்பங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் இரவு நேரத்தில் பயணிக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Stories: