8, 7ம் வகுப்பு படிக்கும் சிவகங்கை சகோதரர்கள் தயாரித்த சோலார் சைக்கிள்: 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 கி.மீ. பயணிக்கலாம்

சிவகங்கை:  சிவகங்கையை சேர்ந்த சகோதரர்கள் சோலாரில் இயங்கும் சைக்கிளை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். சிவகங்கை, காலேஜ் ரோட்டை சேர்ந்த வீரபத்திரன் - அம்மணி தம்பதி மகன்கள் வீரகுரு ஹரிகிருஷ்ணன்(12), சம்பத் கிருஷ்ணன்(11). முறையே  8, 7ம் வகுப்பு படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்காத நிலையில், சோலார் சைக்கிளை தயாரிக்க முடிவு செய்தனர். இதற்காக யூடியூப்பில் விதவிதமான சைக்கிள்களை பார்த்துள்ளனர். முதியோரும் பயன்படுத்தும் வகையில் சோலார் சைக்கிளை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இதற்கான பேட்டரி, மோட்டார், சோலார் பேனல்களை கடைகளிலும், ஆன்லைன் மூலமும் வாங்கி சைக்கிளில் பொருத்தி வெற்றிகரமாக இயக்கியுள்ளனர்.

இதுகுறித்து சிறுவர்கள் கூறியதாவது, ‘‘ஊரடங்கு நேரத்தை உபயோகமாக கழிக்க முடிவு செய்தபோதுதான் சோலார் சைக்கிள் எண்ணம் தோன்றியது. அனைத்து வகையான சைக்கிளையும் இதுபோல் மாற்றலாம். சைக்கிளுடன் சேர்த்து ரூ.10 ஆயிரம் மட்டுமே செலவாகும். சூரிய ஒளி படும்போதும் மற்றும் மின்சாரம் மூலமும் 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் 30 கி.மீ. தூரம் செல்லும். சைக்கிளில் ஸ்விட்சை ஆன் செய்தால் 25 முதல் 35 கி.மீ. வேகத்தில் செல்லலாம். வேகத்தை கூட்ட, குறைப்பதற்கான உபகரணங்களை பொருத்தி பார்க்கும் திட்டமும் உள்ளது. 150 கிலோ எடை வரை வைத்து இந்த சைக்கிளில் செல்லலாம். செல்போன் சார்ஜ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் பலருக்கும் எங்களுக்கு கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றனர்.

Related Stories: