மத்திய சிறையை தொடர்ந்து கிளை சிறை கைதிகளும் வீடியோ காலில் பேசலாம்: இணையதளம் அறிமுகம்

வேலூர்: தமிழகத்தில் மத்திய சிறையைத் தொடர்ந்து கிளை சிறைகளில் உள்ள கைதிகளும் உறவினர்களுடன் வீடியோ காலில் பேசலாம் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா 2வது அலையால் தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும் கிளை சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்தித்து பேச தடை விதிக்கப்பட்டது. மேலும்,  மத்திய சிறையில் உள்ள கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேசி வருகின்றனர். கிளை சிறைகளில் உள்ள கைதிகள், தங்களது குடும்பத்தினர் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, சிறை நிர்வாகம் கிளை சிறைகளில் உள்ள கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், 9 மத்திய ஆண்கள் சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளை சிறைகள், 3 பெண்கள் சிறைகள் உள்ளன. 2வது கொரோனா பரவல் காரணமாக மத்திய, மாவட்ட மற்றும் கிளை சிறை கைதிகளை, உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவலின் போது, மத்திய சிறையில் உள்ள கைதிகள் மட்டுமே தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி வந்தனர். இந்தாண்டு மத்திய சிறை தொடர்ந்து, கிளை சிறைகளில் உள்ள கைதிகளை சந்தித்து பேசுவதற்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இதற்காக புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. https://eprisons.nic.in என்ற இணையதள முகவரியில் கைதிகளின் உறவினர்கள் தங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, கிளை சிறையில் உள்ள கைதியின் பெயர் மற்றும் வீடியோ காலில் பேசும் நேரம், தேதி குறிப்பிட்டு சிறை நிர்வாகத்திற்கு அனுப்ப வேண்டும். பின்னர் சிறை அதிகாரிகள், கைதிகள் வீடியோ பேசுவதற்கு, அவர்களின் உறவினர்களுக்கு லிங்க் அனுப்பப்படும். அந்த லிங்க் கிளிக் செய்து வீடியோ காலில் பேசலாம். இந்த நடைமுறை கடந்த ஒரு வாரமாக பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை சிறைகளில் உள்ள கைதிகள் பேசி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: