சிவராஜ் சிங் சவுகான் பதவி பறிக்கப்படும்... ம.பி பாஜ முதல்வர் பதவிக்கு 2 பேர் போட்டி?.. திக்விஜய் சிங்கின் அடுத்தடுத்த டுவிட்டால் பரபரப்பு

போபால்: மத்திய பிரதேச முதல்வரின் பதவி பறிக்கப்படும் என்றும், அடுத்த முதல்வர் பதவிக்கு 2 பேர் போட்டி போட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் போட்ட அடுத்தடுத்த டுவிட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதவி பறிக்கப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை எம்பியுமான திக்விஜய் சிங் திடீர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக திக் விஜய் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘பாஜக மாநிலத் தலைவர் விஷ்ணு தத் சர்மா அல்லது ஒன்றிய அமைச்சர் பிரஹ்லாத் படேல் ஆகியோரில் ஒருவர் முதல்வர் போட்டியில் உள்ளனர்.

சிவராஜ் சிங் சவுகான் முதல்வர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு முன்னதாக மற்றொரு டுவிட்டில், ‘பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், தங்கள் கட்சி ஆளும் மாநில முதல்வர்களை மாற்றி வருகின்றனர். அதனால், சில பாஜக தலைவர்கள் தங்களுக்கு பதவி கிடைக்குமா? என்ற ஆசையில் உள்ளனர். அதனால், மத்திய பிரதேச மக்கள், மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்பதை பற்றி நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். அரசு நிர்வாகத்தில் தோல்வியடைந்த அவர் (சிவராஜ் சிங் சவுகான்) விரைவில் வெளியேறுவார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

திக்விஜய் சிங்கின் அடுத்தடுத்த டுவிட்டுகளால் மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணம், கிட்டதிட்ட நான்கு மாதங்களுக்குள் உத்தரகண்ட் மாநிலத்தில் இரண்டு முதல்வர்களை பாஜக தலைமை மாற்றியுள்ளது. அடுத்த முதல்வர் மாற்றம் பட்டியலில் கர்நாடகா உள்ளதாகவும், அதற்கடுத்த லிஸ்டில் மத்திய பிரதேசம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திக்விஜய் சிங்கின் டுவிட்டுக்கு பதிலளித்த மாநில பாஜக தலைவர் சர்மா, ‘கமல்நாத் ஆட்சியை கவிழ்த்த பெருமை உங்களிடம் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்ததற்காக நீங்கள் பெருமைப்படுகிறீர்கள்.

இது உங்களது காங்கிரஸ் கலாசாரம், பாஜகவின் கலாசாரம் இதுவல்ல. மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியே தொடரும். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான போட்டியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் சோனியா காந்தியின் வேட்பாளர் ராகுல் காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வேட்பாளர் சோனியா காந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: