பேச்சிப்பாறை அணை மறுகாலில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பெய்து வருகின்ற மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணை மறுகாலில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பதிவாகி இருந்தது. பகல் வேளையில் வெயில் கொளுத்தியது. இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.72 அடியாகும். அணைக்கு 734 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. இந்த நிலையில் 506 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 259 கன அடி தண்ணீர் மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73.52 அடியாகும். அணைக்கு 177 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 16.56 அடியும், சிற்றார்-2ல் 16.66 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 25.70 அடியாகும். மாம்பழத்துறையாறு அணையில் 51.76 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. முக்கடல் அணையில் 22.7 அடியாக நீர்மட்டம் இருந்தது.  இதற்கிடையே மலையோர பகுதிகளில் பெய்த மழை காரணமாக குமரியின் குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அணை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Stories: