மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது: டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

டெல்லி: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுவதற்காக நேற்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்வருடன், தயாநிதி மாறன் எம்.பி, கனிமொழி எம்.பி உட்பட 8 பேர் உடன் சென்றனர். நேற்றிரவு 7.45 மணிக்கு டெல்லி விமானநிலையம் சென்று இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினை நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி., தமிழக டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து சாணக்கியாபுரியில் இருக்கும் புதிய தமிழ்நாடு இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார். அங்கு அவருக்கு திமுக எம்.பி.க்கள் கதிர் ஆனந்த், தமிழச்சி தங்கபாண்டியன், கவுதம சிகாமணி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் 12 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதியை சந்தித்து பேசினார். பின்னர் டெல்லியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் ஒப்புக் கொண்டுள்ளார். சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பேரவையில் கலைஞரின் உருவப்படம் திறந்து வைக்கப்படுகிறது. பேரவையில் கலைஞரின் உருவப்படத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க உள்ளார். மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டை குடியரசு தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஓரிரு நாட்களில் விழாவின் தேதி முடிவு அறிவிக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய ஆவர்; 7 பேர் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை திமுக அரசு முன்னெடுக்கும்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை. உரிய நேரத்தில் ஆலோசனை நடத்தி பள்ளிக் கல்லூரிகளை திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: