உ.பி சட்டப் பேரவை ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை: செயலக அதிகாரி உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்  பேரவை ஊழியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிய ைதடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவை செயலக ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகளை அணிந்து வரக் கூடாது என்றும், செயலகத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப சாதாரண ஆடைகளை அணிந்து வருமாறும் பேரவை இணைச் செயலாளர் நரேந்திர குமார் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை, ‘சட்டப் பேரவை செயலக ஊழியர்கள், அலுவலக நேரங்களில் ஜீன்ஸ், டி-ஷர்ட்கள் போன்ற அணிந்து வரக்கூடாது. பேரவை செயலகத்தின் கண்ணியத்திற்கு ஏற்ப, அனைவரும் சாதாரண உடை அணிந்து பணிக்கு வரவேண்டும்.

ஆண் ஊழியர்கள் சட்டை-பேன்ட் போன்ற உடையை அணிந்து அலுவலகத்திற்கு வரலாம். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார், பேன்ட்-ஷர்ட், சுடிதர் குர்தா, துப்பட்டா அணிந்த வரலாம். இருபாலரும் செருப்பு அல்லது பூட்ஸ் அணியலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேரவை சபாநாயகர் ஹிருதே நாராயண் கூறுகையில், ‘அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே ஆடை அணிதல் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எங்கள் தரப்பிலிருந்து ஆடை கட்டுப்பாடுகள் குறித்த எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை’ என்றார்.

Related Stories: