பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சமயபுரம் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

மண்ணச்சநல்லூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய சமயபுரம் ஆட்டு சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.2கோடிக்கு ஆடுகள் விற்பனையானது. திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஆட்டுச்சந்தை தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் ஒன்றாகும். சனிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் வழக்கமாக ஆயிரம் முதல் 5ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும். இந்த சந்தையில் சமயபுரத்தில் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆடு வளர்ப்பவர்கள், ஆட்டு வியாபாரிகள் பெருமளவில் கூடுவார்கள். வரும் 21ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி, இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தி வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுத்து நண்பர்கள், உறவினர்கள், ஏழை, எளியவர்கள் என்று பாகுபாடின்றி அனைவருக்கும் பகிர்ந்தளித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சமயபுரத்தில் நேற்று ஆட்டுச்சந்தை களை கட்டியது. கொரோனா ஊரடங்குக்கு பின் முதன் முதலாக நேற்று சந்தை கூடியது. இந்த சந்தையில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் ஆடுகள் குவிந்த வண்ணம் இருந்தன. தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் தங்களது ஆடுகளை நேற்றுமுன்தினம் இரவே வாகனங்களில் கொண்டு வந்திருந்தனர். சுமார் 2ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி முதலே ஆடுகள் விற்பனை களைகட்டிய தொடங்கியது. வியாபாரிகளும் மற்றும் பொதுமக்களும் சந்தையில் குவிந்தனர்.

இஸ்லாமியர்கள் நேரடியாக வந்து தங்களுக்கு பிடித்த ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர்.  இதில் குட்டி ஆடுகள் ரூ.2000 முதல் ரூ.3ஆயிரம் வரையிலும், நடுத்தர ஆடுகள் ரூ.5ஆயிரம் முதல் 7ஆயிரம் வரையிலும், பெரிய ஆடுகள் ரூ.15ஆயிரம் முதல் ரூ.20ஆயிரம் வரையிலும் விற்பனையானது. பண்டிகைகாலம் என்பதால் வழக்கத்தைவிட ஆடுகள் ரூ.ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கூடுதல் விலைக்கு போனது. ஆட்டுத்தரகர்கள் மட்டுமின்றி நேரடியாகவும் பலர் ஆடுகளை வாங்கி சென்றதால் வழக்கமாக விற்பனையானதைவிட ஆயிரம் ரூபாய் அதிகமாகவே ஆடுகள் விற்பனையானது. ரூ.7 ஆயிரம் முதல் 20ஆயிரம் வரை ஆடுகளின் எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையானது. சமயபுரம் ஆட்டு சந்தையில் நேற்று ஒரு நாளில் 10ஆயிரம் ஆடுகள் ரூ.2 கோடி வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: