கேரள மாநில செல்லும் ரயில் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளாததால் தொற்று பரவும் அபாயம்

பொள்ளாச்சி: கொரோனா 2ம் அலை வைரஸ் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பின் கேரளாவிலிருந்து ஒரு சில எக்பிஸ்ரஸ் ரயிலே பொள்ளாச்சி வழியாக பிற பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. தற்போது கேரள மாநிலத்தில், கொரோனா பரவலையடுத்து, ஜிகா வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில், ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக சுகாதாரத்துறையினர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். கேரளாவிலிருந்து பொள்ளாச்சிக்குள் வரும் அனைவரும் பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், கேரளாவிலிருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் தொடர்பான பரிசோதனையும், கட்டுப்பாடும் இல்லையென்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலானது தினமும் அதிகாலை 5.30 மணிக்கும், பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 4.40 மணிக்கும் பொள்ளாச்சி மார்க்கமாக செல்கிறது. ஆனால், கேரள மாநில பகுதியிலிருந்து பொள்ளாச்சி வழியாக செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்தவித பரிசோதனை மேற்கொள்ளாமலும், கட்டுப்பாடு விதிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி, ரயில்வே ஸ்டேஷனில் சானிடைசர் பயன்பாடு இல்லாமல் இருப்பது, பயணிகள் முக கவசம் அணியாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக தொடர்ந்து புகார் எழுகிறது. பயணிகளுக்கு முறையான பரிசோதனை மற்றும் கட்டுப்பாடு இல்லாததால், தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கேரள மாநிலத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக செல்லும் ரயில்களில் பயணிப்போருக்கு முறையான பரிசோதனை மேற்கொண்டு தொற்று பரவாமல் கட்டுப்படுத்த ரயில்வே நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: