கேரளாவில் ஜிகா வைரஸ் பரவல் எதிரொலி எல்லை சோதனைச்சாவடிகளில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

பொள்ளாச்சி, ஜூன் 17: பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லைப்பகுதியில் உள்ள சோதனைச்சாவடிகளில், கொரோனா 2வது அலை தடுப்பு நடவடிக்கைக்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கொசு மூலம் பரவும்  ஜிகா வைரஸ் பரவலால், அம்மாநிலத்தில் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில்  கொரோனாவை தொடர்ந்து, ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக, பொள்ளாச்சியை அடுத்த தமிழக-கேரள எல்லைக்குட்பட்ட கோபாலபுரம், நடுப்புணி, மீனாட்சிபுரம், வடக்காடு, ராமபட்டினம் உள்ளிட்ட பல்வேறு சோதனைச்சாவடிகளில், கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு  கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளாவிலிருந்து  அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும்  வாகனங்களை தவிர பிற  வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும்,  இ-பாஸ் உள்ள வாகனங்கள் மட்டுமே தமிழக எல்லைக்குள்

அனுமதிக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக, கேரள மாநில பகுதியிலிருந்து அனைத்து வகையான வாகனங்களில் வருபவர்கள் மட்டுமின்றி, பாதை யாத்திரையாக வருவோருக்கும், பொள்ளாச்சியை அடுத்த எல்லைப்பகுதியில் சுகாதாரத்துறையினர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் நேற்று, மீனாட்சிபுரம், கோபாலபுரம் மற்றும் நடுப்புணி சோதனைச்சாவடிகளில், ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து சப்-கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியில்,  ஜிகா வைரஸால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதால், அம்மாநிலத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக தமிழகத்துக்கு பல்வேறு வழிகளில் வரும் அனைவரையும் முறையாக பரிசோதனை செய்த பிறகே அனுப்ப வேண்டும் எனவும், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் சப்-கலெக்டர் அறிவுறுத்தினார்.

Related Stories: