கோயில் பூசாரி வீட்டை உடைத்து 1.847 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை: குஜிலியம்பாறையில் துணிகரம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் கோயில் பூசாரி வீட்டை உடைத்து 1 கிலோ 847 கிராம் வெள்ளி பூஜை பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, விஐபி நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (58). கோயில் பூசாரி. இவர் வெளியூரில் தங்கி வரும் நிலையில், வீட்டில் மனைவி கலைவாணி (50), 2 மகள்கள், ஒரு மகன் இருந்தனர். குஜிலியம்பாறை - பாளையம் ரோட்டில் இவர்களது குலதெய்வமான அங்காள ஈஸ்வரி வரகரம்மன் கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான வெள்ளி பூஜை பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து சென்று பூஜை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு, தங்கராஜ் தம்பி சவுந்திரபாண்டியன் கோயிலுக்கு சென்று பூஜை செய்து, பின் வெள்ளி பொருட்களை வீட்டில் வைத்துள்ளார்.

பின்னர் தங்கராஜ் குடும்பத்தினர் அன்றிரவு வீட்டை பூட்டி விட்டு, குஜிலியம்பாறையில் உள்ள  உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, வீட்டில் இருந்த 1 கிலோ வெள்ளி கிரீடம் மற்றும் கொலுசு, செம்பு என 1 கிலோ 847 கிராம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் மற்றும் பீரோவில் இருந்த தங்க மோதிரம், தாலி குண்டு, தாலி என முக்கால் பவுன் தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர். நேற்று காலை சவுந்திரபாண்டியன் கோயில் பூஜை பொருட்களை எடுக்க வீட்டிற்கு வந்த பின்புதான் இக்கொள்ளை சம்பவம் பற்றி தெரிந்தது. சவுந்திரபாண்டியன் அளித்த தகவலின்பேரில் குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: