தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாஜவை கொண்டு சேர்ப்போம்: எல்.முருகன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பாஜவை கொண்டு போய் சேர்ப்பது தான் எங்கள் இலக்கு, என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவை கடந்த 7ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகனுக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.தொடர்ந்து அவருக்கு மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் துறைகள் ஒதுக்கப்பட்டது. பாஜவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது தான் விதியாக உள்ளது. இதனால், எல்.முருகன் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.  தொடர்ந்து மத்திய இணையமைச்சராக எல்.முருகன் டெல்லியில் உள்ள அவருக்கான துறையில் பதவியேற்று கொண்டார். மேலும் பாஜ தேசிய தலைவர்களை சந்தித்தும் வாழ்த்து பெற்றார். பதவியேற்ற பின்னர் முதல்முறையாக நேற்று காலை அவர் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பாஜ சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சென்னை தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்திற்கு வந்தார். அங்கும் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜவின் தலைவராக கடந்த ஆண்டு மார்ச்சில் பொறுப்பேற்கும் போது தமிழக சட்டப்பேரவையில் பாஜ எம்எல்ஏக்கள் அமருவார்கள் என்று கூறி எனது பணியை தொடங்கினேன். அதே போல் இன்று 4 பேர் சட்டமன்றத்துக்குள் சென்றுள்ளனர். பட்டியலினத்தோர், இளைஞர்கள், விவசாயிகள் என்று அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பாஜ பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாஜவின் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று இருக்கிறார். பாஜவை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்ப்பது தான் எங்கள் இலக்கு. பாஜவை யாரும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: