அரசு போக்குவரத்துக் கழக அதிமுக தொழிற்சங்க நிர்வாகி வீட்டில் ரெய்டு: கட்டுக்கட்டாக டெபாசிட் ஆவணங்கள் சிக்கியது

சேலம்: சேலம் அரசு போக்குவரத்துகழக அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளராக இருப்பவர் சென்னகிருஷ்ணன். கண்டக்டரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சேலம் லஞ்ச ஒழிப்புதுறைக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புகார் சென்றது. அவர் மீது வழக்கு பதிவு செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தாமல், கிடப்பில் போட்டுவிட்டனர்.

ஆளுங்கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இதற்கு அதிகாரிகளும் துணை போனதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் புதியதாக நியமிக்கப்பட்ட விஜிலென்ஸ் அதிகாரிகள், கிடப்பில் உள்ள வழக்குகளை தூசி தட்டி பார்த்தனர். அப்போது தான் சென்னகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடத்தாமல் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை உயர்அதிகாரிகள் நியமித்தனர். அவரது தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள், மேட்டூரில் உள்ள சென்னகிருஷ்ணனின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். காலை முதல் இரவு 9 மணி வரை சோதனை நடந்தது. இதில் வங்கிகளில் டெபாசிட் செய்த ஆவணங்களை போலீசார் எடுத்தனர். ரூ.76 லட்சத்திற்கான பத்திரங்களை எடுத்து சென்றனர். மேலும், தொடர் விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் சோதனை நடத்தியிருக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகளை தாண்டிய பிறகு சோதனை நடத்தியிருக்கிறோம். எதற்காக சோதனை நடத்தப்படாமல் இருந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது’’ என்றனர்.

Related Stories: