‘இன்னும் 6 மாசத்துல மொத்த ஊடகமும் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ளே வந்துரும்’: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மிரட்டல் பேச்சு

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதற்காக கோவையில் இருந்து சாலை வழியாக அவர் சென்னைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் நேற்று முன்தினம் அண்ணாமலைக்கு பாஜவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், ஊடகங்களை  நீங்கள் மறந்து விடுங்கள். நம்மைப்பற்றி பொய்யா செய்தி போடுறாங்க. அடுத்த ஒரு ஆறு மாதத்தில் நீங்க பாப்பீங்க. மொத்த ஊடகங்களையும் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள வந்துரும். முன்னாள் மாநில தலைவர் முருகன்  தற்போது செய்தி ஒளிபரப்பு துறை இணை அமைச்சராகி இருக்கிறார். எல்லா  ஊடகங்களும் அவருக்கு கீழேதான் வரப்போகுது என்று பேசினார். ஊடகங்களை பகிரங்கமாக மிரட்டும் வகையில் அண்ணாமலை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் கண்டனம்: குமரி மாவட்டம் திருவட்டாரில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் நிருபர்களிடம் கூறுகையில், அண்ணாமலையின் பேச்சு ஊடகங்களை மிரட்டும் செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகத்துறை என்பது தனித்துவமாக செயல்பட அனுமதிக்க வேண்டிய துறை. கருத்து சுதந்திரத்தை பதிவு செய்ய வேண்டிய கடமை ஊடகங்களுக்கு  உள்ளது. தனிப்பட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட கட்டாயபடுத்துவது  என்பதை  ஏற்க முடியாது. இதனை மிரட்டல் தொனியாகவே பார்க்கிறேன் என்றார்.

இதற்கிடையே, ராசிபுரத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை, ஐஜேகே நிர்வாகி மறித்து நான் கன்னடன் என்று சொல்வதுதான் பெருமை என நீங்கள் பேசியது சமூக வலைதளங்களில் உள்ளது.   அப்படி பேசியது உண்மையா? என கேள்வி எழுப்பினார். இது பற்றி பாஜ இணையபிரிவில் கேளுங்கள் என்று அண்ணாமலை கூறினார். தொடர்ந்து வள்ளிராஜா, உங்களை நேரில் தான் கேட்கிறேன். பதில் சொல்லுங்கள் என்றார். அப்போது, அங்கிருந்த பாஜகவினர் கேள்வி கேட்ட வள்ளிராஜாவை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.

* போலீசுடன் பாஜ மோதல், தள்ளுமுள்ளு

திருச்சி: திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே அவருக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட இருந்தது. அண்ணாமலையை வரவேற்கும் விதமாக அண்ணாசிலை அருகே பாஜகவினர் பட்டாசு வெடிக்க முயன்றனர். தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளதால் தடுக்க முயன்ற போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சில பாஜகவினர், போலீசாரை தாக்கவும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள், பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த நேரத்தில் பட்டாசு வெடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து பாஜவினர் 11 பேர் மீது  கோட்டை போலீசார் 4 பிரிவின் கீழ்  வழக்கு பதிந்தனர்.

Related Stories: