பொறியியல் நுழைவுத் தேர்வை ரத்து செய்தது போல் நீட் தேர்வை ரத்து செய்ய முதல்வர் சட்டம் இயற்ற வேண்டும்!: திருமாவளவன் வலியுறுத்தல்..!!

அரியலூர்: நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிந்து சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது தந்தையின் 11வது ஆண்டு நினைவுநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் மரியாதையை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் திருமாவளவன் பேசியதாவது, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஏ.கே.ராஜன் குழு, தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

2007ம் ஆண்டு பொறியியல் துறைக்கான நுழைவுத் தேர்வு கூடாது என்று தடை சட்டம் கொண்டு வந்த அரசு திமுக. அன்றைய முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் துணிவாக சட்டத்தை கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தினார். கருணாநிதி இயற்றியதை போல் நீட் தேர்வு வேண்டாம் என்று இன்றைய முதல்வரும் கலைஞரின் அரசியல் வாரிசுமான மு.க.ஸ்டாலின் அவர்கள் துணிந்து சட்டம் இயற்ற வேண்டும். நீட் தேர்வை விளக்க வேண்டும். தமிழ்நாட்டு மாணவர்களை காத்திட வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

Related Stories: