வண்ணமயமான வான வேடிக்கை...முப்படைகளின் அணிவகுப்பு என ஃபிரான்சில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தேசிய தினம்..!!

பாரீஸ்: ஃபிரான்ஸ் நாட்டில் தேசிய தின கொண்டாட்டங்கள் வண்ணமயமான வான வேடிக்கையுடன் நிறைவு பெற்றது. பாரீஸ் நகரில் உள்ள பஸ்தி என்ற சிறைச்சாலை மக்கள் புரட்சி மூலம் தகர்க்கப்பட்டு 1789ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி மன்னர் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாள் ஃபிரான்ஸ் நாட்டில் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய தின கொண்டாட்டங்கள் பாரீஸ் நகரத்தில் ராணுவ அணிவகுப்புடன் தொடங்கின.

முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அதிபர் இமானுவேல் மேக்ரானும், பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் ஏற்றுக்கொண்டனர். ஃபிரான்ஸ் நாட்டு விமானப்படையின் சாகசங்கள் கண்களை கொள்ளைகொண்டன. அணிவகுப்புக்கு முன்பாக ராணுவ உடை அணிந்த வீரர் ஒருவர், மேலைநாட்டு முறைப்படி மண்டியிட்டு தனது காதலியிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. அனைவரின் கரவொலிக்கு இடையே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார் 26 வயது மேக்சிபிரினி.

இந்த காட்சிகளை ஃபிரான்ஸ் ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. பகல் முழுவதும் ஃபிரான்ஸ் தேசிய நாள் கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தின் பின்னணியில் இரவில் அரங்கேறிய வான வேடிக்கை வானத்தையே வண்ணமயமாக மாற்றியது. இரவு பொழுதை பகலாக்கிய வான வேடிக்கைகளை மக்கள் குடும்பம் குடும்பமாக கண்டு ரசித்தனர். அச்சமயம் ஒருவருக்கு ஒருவர் அவர்கள் தேசிய நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

Related Stories: