ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மோட்டார் மூலம் தண்ணீர் திருட்டு: ஆந்திர விவசாயிகள் அடாவடி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் மோட்டார் மூலம் விவசாயத்திற்கு தண்ணீரை ஆந்திர விவசாயிகள் உறிஞ்சுவதை தொடர் வேலையாக வைத்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஆண்டு, முதல் தவணை காலத்தில் தண்ணீர் வழங்க வேண்டும் என  தமிழக அரசு, ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதியது.

ஆனால், கண்டலேறு அணையில் நீர் இருப்பு இல்லாததால் ஆந்திர அரசால் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், மழை பெய்ததால் கண்டலேறுவில் போதிய அளவு தண்ணீர் இருப்பு காணப்பட்டது.  இதனால் ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து கடந்த ஜூன் 14ம் தேதி  தண்ணீர் திறந்து விட்டது. இந்த தண்ணீர் தமிழகத்திற்கு 16ம் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு வந்தது. இந்த தண்ணீர் ஜீரோ பாயிண்டில் 13ம் தேதி காலை 6 மணிக்கு 426 கன அடியாகவும், நேற்று காலை 6 மணிக்கு 262 கன அடியாகவும், பிற்பகல் 12 மணிக்கு 297 கன அடியாகவும் வருகிறது. இவ்வாறு, தண்ணீரின் அளவு குறைவதற்கான காரணம்.

ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர பகுதியான கண்டிகை, ஆம்பாக்கம், சிறுவனம்புதூர், மதனம்பேடு, மதனஞ்சேரி ஆகிய பகுதிகளில் ஆந்திர விவசாயிகள் ராட்சத மோட்டார் மூலம் கிருஷ்ணா கால்வாயில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீரை உறிஞ்சி நாற்று நடவும், பயிர்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன் படுத்தகூடாது என அதிகாரிகள் தெரிவித்தும், ஆந்திர விவசாயிகள் இதை கண்டுகொள்ளவில்லை. இதனால், தமிழகத்திற்கு தண்ணீரின் அளவு குறைவாகவே கிடைக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஆந்திர அதிகாரிகள் தண்ணீர் உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், தற்போது கண்டலேறுவில் 1500 கனஅடி நீர் திறக்கப்பட்டாலும் நெல்லூர் பகுதியில் குடிநீர் தேவைக்காக ஆந்திர அரசு நேற்று முதல் 500 கன அடி தண்ணீர் திறந்து விட்டுள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி முதல் கண்டலேறுவில் திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை தமிழகத்திற்கு 1.225 டிஎம்சி (ஒன்றேகால் டிஎம்சி ) தண்ணீர் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: