பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாத ஊராட்சி செயலர்கள் மீது கடும் நடவடிக்கை: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் எச்சரிக்கை

செங்கல்பட்டு: பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத ஊராட்சி செயலர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் எச்சரித்தார். காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சசிகலா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டாரம்) ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்தூர், வண்டலூர், ஆலப்பாக்கம், கருநிலம், சிங்கபெருமாள்கோயில், ஊரப்பாக்கம், பாலூர், மண்ணிவாக்கம், ஆப்பூர், கொளத்தூர், தென்மேல்பாக்கம் உள்பட 39 ஊராட்சி மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில், கலந்து கொண்ட பொதுமக்கள்  குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஆக்கிரமிப்பு குளம், குட்டை மேம்பாடு, தொகுப்பு வீடுகள், நூறு நாள் வேலை திட்டம், ஊராட்சி செயலர்களின் செயல்பாடு  உள்பட பல கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட பின்னர், எம்எல்ஏ  வரலட்சுமி மதுசூதனன் பேசியதாவது. செங்கல்பட்டு எம்எல்ஏவாக 2வது முறையாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆதரவோடு வெற்றிப்பெற்றுள்ளேன். எம்எல்ஏ பதவியை பதவியாக நினைக்காமல், பொறுப்பாக நினைத்து மக்களிடம் செல். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என, எங்களுக்கு முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர், சாலை மின்விளக்கு உள்பட அடிப்படை வசதிகளை அதிமுக அரசு சரிவர செய்யவில்லை. தற்போது 300க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனுக்களின் கோரிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சி செயலர்கள் விரைந்து முடிக்கவேண்டும். குறிப்பாக, ஊராட்சி செயலர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளன. ஊராட்சி செயலர்கள் தினமும் ஊராட்சிக்கு சென்று பொதுமக்களின் அடிப்படைதேவைகளை பூர்த்தி செய்யவேண்டும்.

பொதுமக்களை அலைகழிக்க கூடாது. அப்படி செய்பவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். ஊராட்சி தேவைகளை உடனடியாக நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள், ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவேண்டும். இதற்கான உதவிகளை தமிழக அரசிடம் இருந்து பெற்றுத்தர நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், ஆப்பூர் சந்தானம், கே.பி.ராஜன், அருள்தேவி, திருமலை, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: