நீட் தாக்கம் குறித்து அறிய தமிழக அரசு குழு அமைத்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல!: ஐகோர்ட் கருத்து..!!

சென்னை: நீட் தாக்கம் குறித்து அறிய தமிழக அரசு குழு அமைத்திருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு தொடங்கியது. ஏ.கே.ராஜன் குழுவுக்கு ஆதரவாக இடையீட்டு மனுதாரர்களாக திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்திருக்கிறது.

இந்த வழக்கு விசாரணை தொடங்கிய உடனே நீட் தேர்வு குறிப்பிட்ட பிரிவினருக்கு பாதிப்பாக உள்ளதா? என ஆய்வு செய்ய குழு நியமித்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது அல்ல என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் மாநில அரசு நீட் தேர்வை தொடர வேண்டுமா என உச்சநீதிமன்றத்தை தான் கேட்கும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். மேலும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே தமிழக அரசு இந்த குழுவை அமைத்துள்ளதாகவும், பாதிப்பு குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும் என்றும் நீதிபதி மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு தெரிவித்தார்கள்.

தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசு கொள்கை முடிவு தான் எடுத்துள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்கும் என்று குறிப்பிட்டார்கள். இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இதுகுறித்து பதில் அளிப்பதாக கூறி அவரது வாதங்களையும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கோள்காட்டி வாதிட்டு வருகிறார்.

Related Stories: