இமாச்சலப்பிரதேசத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: வீடு, கார்கள் அடித்து செல்லப்பட்டன

தர்மசாலா:  இமாச்சலப்பிரதேசத்தில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏராளமான கார்கள் மற்றும் வீடுகள் அடித்து செல்லப்பட்டன.  இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்கள் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் நேற்று விடிய விடிய கொட்டிய கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாக்சு நாக்கில் இருந்த வடிகாலில் கனமழை காரணமாக வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதில் 4 கார்கள் மற்றும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் அரசு பள்ளி கட்டிடம் மழை வெள்ளத்தில் சேதமடைந்தது. இதன் அருகில் இருந்த ஓட்டலும் நீரில் மூழ்கியது. மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக தர்மசாலா விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள்  ரத்து செய்யப்பட்டன.

பெருவெள்ளம் காரணமாக மஞ்ஜிகி காட் பகுதியில் இரண்டு கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. வெள்ளத்தினால் மண்டி-பதன்கோட் நெடுஞ்சாலையில் உள்ள பாலமும் பலத்த சேதமடைந்தது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளது. தர்மசாலாவில் உள்ள சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்கும்படியும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மீட்புபணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உதவி செய்ய தயார்: மோடி

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘கனமழை காரணமாக இமாச்சலில் நிலவி வரும் சூழல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாநில அரசுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: