பழனிக்கு வந்த கேரள பெண் கூட்டு பலாத்காரத்துக்கு ஆளானாரா?: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பழனியில் நேரடி விசாரணை..!!

பழனி: பழனியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த கேரள பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் தற்போது விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. பழனியில் கேரள பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுவது குறித்து பழனி காவல் துணை கண்காணிப்பாளர் சிலரிடம் திண்டுக்கல் எஸ்.பி. ரவளிபிரியா நேரில் விசாரணை நடத்தி வருகிறார். கேரளாவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பழனிக்கு வந்த போது 3 நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. கணவரை அடித்து விரட்டிவிட்டு, கேரள பெண்ணை தங்கும் விடுதிக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

பழனி அடிவாரத்தில் உள்ள காவல்துறையிடம் புகார் அளிக்க முயன்ற போது, அதை வாங்க மறுத்ததாகவும் சம்பந்தப்பட்ட பெண் குற்றம்சாட்டியிருந்தார். இச்சம்பவம் குறித்து கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, பழனி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேரள டி.ஜி.பி. அணில் காந்த், தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தனர். மேலும் பழனியில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

தற்போது பழனி காவல் துணை கண்காணிப்பாளர் சிலரிடம் திண்டுக்கல் எஸ்.பி. நேரில் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கேரள பெண் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான புகார் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரள போலீஸ் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் கூட்டு பாலியல் வன்கொடுமை, கடத்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கேரள பெண் கணவருடன் தங்கிய விடுதி ஊழியர்களிடமும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: