தசைநார் சிதைவு நோயில் வாடும் நாமக்கல் சிறுமி மித்ரா.. ரூ.6 கோடி வரியை தள்ளுபடி செய்யாத ஒன்றிய அரசு..10 நாட்களில் சிகிச்சை அளிக்க கெடு!!

நாமக்கல் : குமாரபாளையத்தில் உள்ள சிறுமியின் முதுதண்டுவட சிகிச்சைக்கான நிதி கிடைத்தும் ரூ. 6 கோடி இறக்குமதி வரியை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யாததால் மருந்து வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே காந்தி நகரில் வசிக்கும் சதீஷ் குமார் - பிரியதர்சினி தம்பதியின் 2 வயது குழந்தை மித்ரா எழுந்து நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கோவையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது சிறுமிக்கு தண்டுவட சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை குணப்படுத்த ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் மருந்து மட்டுமே பயன்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் விலை ரூ. 16 கோடி என்றும் மருந்து இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரி உட்பட ரூ.22 கோடி தேவைப்படும் என்றும் கூறினர்.இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சமூக வலைத்தளங்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக உதவி கேட்டனர்.இந்த வகையில் தற்போது மருந்துக்கான ரூ. 16 கோடி கிடைத்துள்ளது. மருந்து இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்படும் ரூ. 6 கோடி வரியை மத்திய அரசு கருணை அடிப்படையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.இது தொடர்பாக பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், பல்வேறு அதிகாரிகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர். சிகிச்சை அளிப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இதுவரை எந்தப்பதிலும் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் பரிதவித்து வருகின்றனர்.மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: