புகார் சேவை மையம் தொடங்கி சில நாட்களிலேயே சார்பதிவாளர் அலுவலகம் மீது 2,000 புகார் கொடுத்த பொதுமக்கள்: 50 சதவீதம் புகார் மீது தீர்வு காணல்; பதிவுத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: புகார் அளிக்கும் சேவை மையம் தொடங்கி சில நாட்களிலேயே சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுப்பணி தொடர்பாக 2 ஆயிரம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதில், 50 சதவீதம் புகார் மீது தீர்வு காணப்பட்டுள்ளது என்று பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு, திருமண பதிவு, சிட்பண்ட், சங்கங்கள் பதிவு உள்ளிட்ட பல்வேறு பதிவுப்பணிகள் நடக்கிறது. இங்கு வரும் பொதுமக்கள் பதிவு செய்த நாளன்றே பத்திரத்தை திரும்ப தர  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சில நேரங்களில் பதிவு செய்த ஆவணங்களை உடனே தருவதில்லை.

கட்டிட களப்பணி மேற்கொள்ள 10 நாட்களுக்கு மேல் தாமதம் ஆகிறது. இதனால், பதிவு செய்த பத்திரங்கள் திரும்ப பெறுவதிலும் சிக்கல் உள்ளது. அதே நேரத்தில் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் பதிவுக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில் புகார் சேவை மையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு கால தாமதமோ அல்லது குறைகள் இருந்தாலோ உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் புகார் அளிக்கும் சேவை வசதியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

அதன்படி 9498452110, 9498452120,9498452130 என்ற எண்களில் தொடர் கொண்டு புகார் தெரிவிக்கலாம். வாட்ஸ் அப் மூலமாக புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரின் தன்மை குறித்து ஆராய்ந்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். இந்த சேவை வார நாட்களில் மட்டுமே செயல்படும் என்று கூறப்பட்டன. இச்சேவை ஜூன் 16ம் தேதி தொடங்கிய நிலையில் தினமும் 50 முதல் 100 புகார்கள் வந்ததாக தெரிகிறது. அதன்படி தற்போது வரை 2 ஆயிரம் புகார்கள் பொதுமக்களிடம் வந்துள்ளது. இந்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில், 50 சதவீத புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற புகார்கள் மீது தீர்வு காணும் நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: