போலி எம்சாண்ட் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட 358 எம்சாண்ட் குவாரிகளின் பட்டியல் வெளியீடு: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: போலி எம்சாண்ட் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட 358 எம்சாண்ட் குவாரிகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் போலியான எம்சாண்ட் குவாரிகள் சில இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, ஒரிஜினல் எம்சாண்ட் குவாரிகளை கண்டறியும் வகையில் மதிப்பீட்டு சான்று வழங்க பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் 1200 குவாரிகளுக்கு தனித்தனியாக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது.

இதையேற்று ஏராளமான எம்சாண்ட் குவாரிகள் மதிப்பீட்டு சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தது. அந்த குவாரிகளில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது உறுதியான கற்களை கொண்டு விஎஸ்ஐ என்கிற இயந்திரம் மூலம் நல்ல தரமான எம்சாண்ட் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். இதை தொடர்ந்து அங்கு தயாரிக்கப்படும் எம்சாண்ட் மணலை ஆய்வகத்தில் அனுப்பி பரிசோதித்தனர். இதில், எம்சாண்ட் தயாரிப்பது உறுதியானால் மட்டுமே தமிழக அரசின் கட்டுபாட்டில் உள்ள நெடுஞ்சாலை, வீட்டு வசதி வாரியம், மின்வாரியம், மத்திய அரசு நிறுவனங்களான மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ், மத்திய ஆராய்ச்சி நிறுவனம், இந்திய தரக்கட்டுபாட்டு நிறுவனம், அகில இந்திய கட்டுனர் சங்கம், ஐஐடி, அண்ணாபல்கலை பேராசிரியர் உட்பட 13 பேர் அடங்கிய தொழில்நுட்ப நிபுனர் குழு கூட்டத்தின் மூலம் மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதன்பேரில், தற்போது வரை 358 குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை அதிகபட்சமாக கரூரில் 30 குவாரிகள், திருப்பூரில் 22 குவாரிகள், விருதுநகரில் 2 குவாரிகள், காஞ்சிபுரத்தில் 14 குவாரிகள், கிருஷ்ணகிரி 15 குவாரிகள், செங்கல்பட்டு 10 குவாரிகள், கோவை, கிருஷ்ணகிரி 15 குவாரிகள், நாமக்கல் மாவட்டத்தில் 18 குவாரி, கள்ளக்குறிச்சியில் 5 குவாரிகள், நெல்லை 4 குவாரிகள் என மொத்தம் 358 அங்கீரிக்கப்பட்ட குவாரிகள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குவாரிகளில் ஒரிஜினில் எம்சாண்ட் தயாரிக்கப்படுகிறது என்பது தொடர்பாக அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.மேலும், குவாரியில் எம்சாண்ட் வாங்கும் போது ரசீதில், அது தொடர்பான விவரங்கள் குறிப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி எம்சாண்ட் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: