போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சி மேம்பாலத்திலிருந்து குதித்த ரவுடிக்கு கால் முறிந்தது: மருத்துவமனையில் அனுமதி

தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை திருவள்ளூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி விச்சு (எ) சைலேஷ்(30). இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல், அடிதடி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறித்து வழிப்பறியில் ஈடுபடுதல் உள்ளிட்ட 22 வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், போலீசாரிடமிருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்த விச்சுவை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ரவுடி விச்சு பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் விச்சு தப்பிக்க முயன்றார். அப்போது தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் விச்சுவுக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ராயபுரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த கிச்சடி விஜி என்பவரை கொலை செய்ய விச்சு திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதுகுறித்து ரவுடி விச்சுவிடம் மேலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: