பஸ் ஓட்டியபோது திடீர் மாரடைப்பு 30 பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்: சாலையோரம் நிறுத்திவிட்டு உயிரிழந்த சோகம்

கோபி: கோபி அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சமயோசிதமாக பஸ்சை நிறுத்தி 30க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றிவிட்டு அவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே மணியங்காட்டூரை சேர்ந்தவர் செல்வராஜ் (52). இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், வினோதா (24) என்ற மகளும், விக்ராந்த்(21) என்ற மகனும் உள்ளனர். செல்வராஜ் கவுந்தப்பாடி அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்ற செல்வராஜ் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வெள்ளாங்கோயிலில் இருந்து பஸ்சை ஓட்டி வந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக, செல்வராஜ் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்தார். கண்டக்டர் கனகசபாபதி மற்றும் பயணிகள் செல்வராஜை பார்த்த போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. மாரடைப்பு ஏற்பட்டபோதும், சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் 30க்கும் மேற்பட்டவர்களின் உயிரை காப்பாற்றிவிட்டார் எனக்கூறி பயணிகள் கண்கலங்கினர்.

Related Stories: