நெல்லையில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மார்த்தாண்டம்: நெல்லையில் இருந்து கேரளாவுக்கு 20 டன் ரேஷன் அரிசி கடத்திய லாரியை போலீசார் நேற்று காலை மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மடக்கி பிடித்தனர். இதையடுத்து டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவை அதிக அளவில் கடத்தப்பட்டு வருகின்றன. இந்த கடத்தலை தடுக்க தனிப்படை மற்றும் குமரி எல்லையில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் நேற்று அதிகாலை மார்த்தாண்டம் போலீசார் ரோந்து பணியில்  ஈடுபட்டனர்.

அப்போது ஒரு லாரி வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால், டிரைவர் வேகமாக லாரியை இயக்கினார். இதையடுத்து ரோந்து போலீசார் ஜீப்பில் லாரியை விரட்டி சென்றனர்.  சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் லாரியை மடக்கி பிடித்தனர். அதன் பிறகு லாரியில் சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்டனர். மொத்தம் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் டிரைவர் கருங்கல்லை  சேர்ந்த சதீஸ் (26) என்பதும், நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி  செல்வதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்த லாரி, அரிசி மூட்டைகள் மற்றும்  டிரைவரை போலீசார் உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசாரிடம்  ஒப்படைத்தனர். அவர்கள் டிரைவரை கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளை அனுப்பி வைத்தது யார்? என விசாரிக்கின்றனர்.

Related Stories: