துவண்டு போயுள்ள கட்சிக்கு புத்துணர்வு அளிக்க காங்கிரசில் பிரமாண்ட மாற்றம்: இளைஞர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு 50:50 பதவி

புதுடெல்லி: கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தோற்றதற்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். அப்போது, அமைப்பு தேர்தலை நடத்தி, கட்சியை முழுமையாக மாற்றி பலப்படுத்தும்படி 23 மூத்த தலைவர்கள் அடங்கிய குழு, சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குழப்பத்துக்குப் பிறகு நடந்த சில மாநில தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால், இந்த அதிருப்தி குரல் அடங்கி போனது.தற்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர்  பாஜ.வுக்கு தாவி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் பலமிக்க தலைவராக விளங்கிய ஜோதிராதித்யா சிந்தியா, தனது ஆதரவு எம்எல்ஏ.க்களுடன் பாஜ.வுக்கு தாவி, இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார்.  அதேபோல், பல்வேறு மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சர் நவஜோத் சிங் சித்துவுக்கும் ஏற்பட்டுள்ள மோதலால், உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும்,  சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இவர்களை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் எடுத்து வரும் முயற்சிகள் பெரியளவில் பயன் அளிக்கவில்லை.

இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும், மூத்த தலைவர்கள் பாஜ.வுக்கு தாவுவதையும் தடுக்க  வேண்டும் என்றால், இந்த சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் தலைமை உள்ளது.இதனால், உட்கட்சி பூசலை ஒழிக்கவும், கட்சிக்கு புத்துணர்ச்சியை அளிக்கவும் சோனியா காந்தி அதிரடி திட்டம் வகுத்துள்ளார். கட்சியில் அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், மாநில அளவில் கட்சி அமைப்புகளில் பிரமாண்ட மாற்றங்களை செய்ய அவர் முடிவு செய்துள்ளார். இதில், இளைஞர்களுக்கும், கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் மூத்த நிர்வாகிகளுக்கும் 50:50 என்ற சதவீதத்தில் பதவிகள் வழங்கி ஊக்குவிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

மேலும், மாநில அளவில் பலமிக்க தலைவர்களாக விளங்கும்  சச்சின் பைலட், மல்லிகார்ஜுனே கார்கே, டிஎஸ் சிங் தியோ உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் தேசிய அரசியலுக்கு கொண்டு வரப்பட உள்ளனர். சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்திக்கு அடுத்தப்படியாக, இவர்களை போன்றவர்கள் முன்வரிசையில் நின்று கட்சியை வழி நடத்த உள்ளனர்.

23 குழு தலைவர்களுக்கும் பதவி

காங்கிரஸ் கட்சி அமைப்பில் செய்யப்பட உள்ள பிரமாண்ட மாற்றத்தில், கட்சி தலைமைக்கு கூட்டாக கடிதம் எழுதி பரபரப்பு ஏற்படுத்திய ‘23 குழு’வை சேர்ந்த தலைவர்களுக்கும், பதவிகள் வழங்கப்பட உள்ளன. இந்த கடிதத்தை எழுதியதில் இருந்தே, பலமிக்க தலைவராக வலம் வந்த குலாம் நபி ஆசாத் ஓரம் கட்டப்பட்டு இருக்கிறார். அவருக்கு முக்கிய பதவி அளிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

Related Stories: