தமிழக புதிய ஆளுநர் ரவிசங்கர் பிரசாத்தா?: டெல்லியில் மோடியுடன் பன்வாரிலால் ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் முடிவடைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் முதல் முறையாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் மாலை டெல்லி சென்றார். அவர், நேற்று காலை 10.30 மணிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், பிற்பகல் 12மணிக்கு ஜனாதிபதி மாளிகை சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து 30 நிமிடங்களுக்கும் மேல் ஆலோசனை மேற்கொண்டார். மாலை 4 மணிக்கு டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்திற்கு சென்று ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்புகள் அனைத்தும் மரியாதை நிமித்தமானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், ஆளுநர் மாற்றம் பற்றி குறிப்பாக பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பன்வாரிலால் இன்று காலை சென்னை திரும்புகிறார்.

பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவரது பணிக்காலம் தற்போது வரை 4 ஆண்டு நிறைடைந்து உள்ளதால் அவர் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் தற்போது ராஜினாமா செய்துள்ள முன்னாள் ஒன்றிய அமைச்சர்களில் யாரேனும் ஒருவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. ஒன்றிய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத், தமிழக ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

Related Stories: