பச்சமலை பகுதியில் பெய்த மழையால் லாடபுரம் மயிலூற்று அருவியில் ஒருநாள் கொட்டிய தண்ணீர்-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பெரம்பலூர் : லாடபுரம் மயிலூற்று அருவியில் ஒரே நாள் மட்டும் தண்ணீர் கொட்டியது. மறுநாள் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் லாடபுரம் மயிலூற்று அருவியும் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தின் அருகேயுள்ள பச்சைமலையில் பாறை மீதிருந்து அருவியாகக் கொட்டுகிற மழைநீர், பாறைமீது அமர்ந்துள்ள மயில் பின்னால் தனது தோகையை தொங்கவிட்டதுபோல் காணப்பட்டதால் இந்தஅருவிக்கு மயிலூற்று அருவிஎனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாகவுள்ள பச்சைமலைத் தொடர்ச்சியில் மலையாளப்பட்டி அருகே எட்டெருமைப்பாழி அருவி, கோரையாறு அருகே கோரையாறு அருவி, பூலாம்பாடி அருகே இரட்டைப் புறா அருவி போன்றவை, மலைமீது மயில் கணக்கில் ஏறிச் சென்றால் தான் ஆர்ப்பரிக்கும் அருவியை அடைய முடியும். ஆனால் லாடபுரம் அருவிக்கு லாடபுரம், சரவணபுரம் வழியாக பைக்கிலோ, காரிலோ 3 கிலோ மீட்டர் தூரம் சென்றபிறகு 10 நிமிடத்தில் அருவிக்குச் சென்று விடலாம் என்பதாலேயே எளிதில் சுற்றுலா அந்தஸ்து பெற்றுள்ளது.

இந்த அருவியில் கடந்த 2020 டிசம்பரில் புரெவிப் புயல் காரணமாக அருவியில் தண்ணீர் கொட்டியது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி பச்சைமலைமீது கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக 8ம்தேதி மதியம் முதல் 9ம்தேதி மதியம் வரை ஒருநாள் முதல்வனை போல ஒருநாள்அருவியாக கன மழையால் கொட்டத் தொடங்கி காணாமல் போனது. இதனால் காலையில் தண்ணீர் வருகிறது என்ற தகவலறிந்து மதியத்திற்கு மேல் அருவிக்குச் சென்ற சுற்றுலா ஆர்வலர்கள் தண்ணீர் குறைந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். விரைவில் கோடைமழையில் அருவி மீண்டும் ஆர்ப்பரிக்கும் என ஆவலுடன் பலரும் காத்திருக்கின்றனர்.

Related Stories: