மக்களுக்கு தடுப்பூசி போடும் வேகம் போதாது...! 5 மெட்ரோ நகரங்களில் கொரோனா 3வது அலை அபாயம்: பொது சுகாதார அறக்கட்டளை தலைவர் எச்சரிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் தடுப்பூசி போடும் வேகம் போதாது என்றும், சென்னை உட்பட 5 மெட்ரோ நகரங்களில் கொரோனா மூன்றாவது அலை அபாயம் உள்ளதாக பொது சுகாதார அறக்கட்டளை தலைவர் எச்சரித்துள்ளார்.  கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்திருந்தாலும் கூட, மூன்றாவது அலை அக்டோபர் மாதம் வாக்கில் வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதேநேரம் தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடப்பதால், கொரோனா அச்சுறுத்தல் முற்றிலும் குறையவில்லை என்று பொது சுகாதார அறக்கட்டளையின் தலைவரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் கே.நாத் ரெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘தடுப்பூசி போடும் வேகம் போதாது. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு கோடி மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். கொரோனாவின் மூன்றாவது அலை டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களிலிருந்து தொடங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவின் உருமாறிய டெல்டா பிளஸ் தொற்று பரவல் மெட்ரோ நகரங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாவது அலையின் வேகம் குறைந்து வருகிறது. ஆனால், வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், அருணாச்சல், மேகாலயா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவின் மூன்றாவது அலை அக்டோபர்-நவம்பர் மாதத்தில் வரவாய்ப்புள்ளது. ஆகஸ்ட் முதல் கொரோனாவின் அச்சுறுத்தல் இருப்பதாக எஸ்பிஐ ஆய்வு கூறுகிறது. மூன்றாவது அலை தடுக்க வேண்டுமானால் தடுப்பூசி மற்றம் மற்றும் விழிப்புணர்வின் மூலமே தீர்மானிக்க முடியும். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரியில் தொடங்கி, இன்றைய நிலையில் ஏழு மாதங்கள் ஆகின்றன. சில மாநிலங்களில் தடுப்பூசிகள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 முதல் 70 பேருக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே, கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க முடியும். இரண்டு தடுப்பூசிகளுக்கு இடையிலான காலகட்டம் 12 வாரங்களில் இருந்து 16 வாரங்களாக அதிகரித்து உள்ளதில் குழப்பம் தெரிகிறது. இரண்டு டோஸ்களுக்கு இடையில் அதிக நாட்கள் இடைவெளி எடுப்பதால், அதன் செயல்திறனை பாதிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் போன்ற நாடுகளில், தடுப்பூசி டோஸ் காலம் 12 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு மீண்டும் 8 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

நாமும் அந்த அணுகுமுறையை பின்பற்றுவது நல்லது. 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் கொடுப்பது நல்லது. சில தடுப்பூசி நிறுவனங்கள் இரண்டு டோஸின் செயல்திறன் ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என்று கூறுகின்றன. அதன்பின் பூஸ்டர் டோஸ் தேவையா? என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை. ‘சீரம் சர்வே’படி, ஆன்டிபாடிகள் எந்தளவில் உருவாகியுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கல்வி நிறுவனங்களை நீண்ட நாட்களுக்கு மூடி வைத்திருக்க முடியாது. ஆன்லைன் கல்வி மூலம் ஏழ்மை மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்றும் வேகமாக பரவியதை முதல் மற்றும் இரண்டு அலைகளில் தெரியவந்தது. எனவே, தடுப்பூசி போடும் வேகத்தை தீவிரப்படுத்த வேண்டுதல் அவசியம்’ என்றார்.

Related Stories: