சின்னாளபட்டி அருகே ‘எல்லாமே’ கரியன்குளத்தில் தான் கொட்டப்படுது-குடிநீருக்கு ஆதாரமான குளத்தை காக்க மக்கள் கோரிக்கை

சின்னாளபட்டி : சின்னாளபட்டி மற்றும் அம்பாத்துரை ஊராட்சிக்கு குடிநீர் ஆதாரமான கரியன்குளத்தில் பிளாஸ்டிக் கழிவு, சலூன்கடை முடி கழிவு உள்ளிட்ட அனைத்து குப்பை கழிவுகளும் கொட்டப்படுவதால், குடிநீர் குளம் குப்பைக்குளமாக மாறிவிட்டது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழகத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சின்னாளபட்டியிலிருந்து அம்பாத்துரை செல்லும் வழியில் தேவி கருமாரியம்மன் கோவில் எதிரே 14 ஏக்கர் பரப்பளவில் கரியன்குளம் உள்ளது.

இக்குளத்தை முறையாக தூர்வாராமலும், நீர்வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும் குளத்திற்கு தண்ணீர் வரத்தின்றி இருந்தது. தற்போது மழைநீர் குளத்தில் தேங்கியுள்ளது. அம்பாத்துரை ஊராட்சியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த கரியன்குளத்தில், மூன்று ஆழ்துளை கிணறுகளை அமைத்து, அதன்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுதவிர சின்னாளபட்டியில் உள்ள 4வது வார்டு சோமசுந்தரம் காலனி, ஜவஹர் காலனி 5வது வார்டு கலைஞர் கருணாநிதி காலனி, காமாட்சி நகர், பொன்னன் நகர், சாந்தி நகர் மற்றும் 11வது வார்டு  வி.எம்.எஸ் காலனி, அண்ணா நகர் மற்றும் 10வது வார்டில் பகுதியில் உள்ள 1,000 ஆழ்துளை கிணறுகளின் நீர் ஆதாரமாக இந்த குளம் உள்ளது. தற்போது இந்த குளத்தில் சின்னாளடபட்டி 11 மற்றும் 12வது வார்டு பகுதியில சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மிதக்கின்றன.

இது தவிர சலூன்கடைகளில் சேகரிக்கப்படும் கழிவு முடிகளை மூட்டை,மூட்டையாக கட்டி குளக்கரையில் போடுகின்றனர் என சமூக ஆர்வலரகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மேட்டுப்பட்டியை சேர்ந்த துரைராஜ் கூறுகையில், ‘‘சின்னாளபட்டி மற்றும் அம்பாத்துரை ஊராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கரியன்குளத்தை பாதுகாக்க கடந்த அதிமுக ஆட்சியில் அம்பாத்துரை ஊராட்சி நிர்வாகம் தவறி விட்டது. சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியிலிருந்து குப்பை கழிவுகள் கொட்டுவதை ஊராட்சி நிர்வாகம் தடை செய்ய வேண்டும், என்றார்.

Related Stories: