மாமல்லபுரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு: கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையையொட்டி எச்சூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த சாலையோரத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அருகில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அதனை பொருட்படுத்தாமல், திருக்கழுக்குன்றம் பகுதியில் இருந்து தனியார் மருத்துவமனை கழிவுகள், ஆடு, மாடு, கோழி இறைச்சி கழிவுகள், கிழிந்த காய்கறி கோணி, கறிகோணி, கிழிந்த பெட் ஆகியவற்றை மூட்டை, மூட்டையாக கட்டி கொண்டு வந்து சமூக விரோதிகள் இரவு நேரங்களில் போட்டுவிட்டு செல்கின்றனர்.

இதனால், குப்பையில் இருந்து கடும் தூர்நாற்றம் விசுவதுடன், குப்பைகள் சாலையில் பறந்து சிதறி கிடக்கிறது. மேலும், அருகில் உள்ள விளைநிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் படர்ந்து கிடக்கிறது. வாகனத்தில் செல்லும்போது குப்பைகளில் சிக்கி, வாகன ஓட்டிகள் திணறுவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அங்குள்ள பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடுகளால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து எச்சூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கண்டும் காணாதது போல் மெத்தனமாக இருந்து வருகின்றனர் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, இந்த சாலையில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவதுடன் சாலையில் குப்பைகள் கொட்டாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: