கொரோனா ஊரடங்கு தளர்வால் திருப்புவனத்தில் களைகட்டிய கால்நடை சந்தை-3 ஆயிரம் ஆடுகள் விற்பனை

திருப்புவனம் : ஆடி பிறக்க உள்ளதை முன்னிட்டு திருப்புவனத்தில் கால்நடை விற்பனை களைகட்டியுள்ளது. நேற்று நடந்த சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகின.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய இரு நகரங்களில் மட்டும்தான் கால்நடை சந்தை நடைபெறும். மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை வாங்கி செல்வது வழக்கம்.

திருப்புவனத்தைச் சுற்றிலும் 163 கிராமங்கள் உள்ளன. கிராமப்புற விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை சந்தையில் விற்பனை செய்துவிட்டு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். திருப்புவனம் சந்தையில் சராசரியாக 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும். கொரானோ பரவல் காரணமாக சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் பலரும் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர்.

இம்மாதம் 17ம் தேதி ஆடி மாதம் பிறக்க உள்ளது. கிராமங்களில் தலை ஆடி வெகு விசேஷமாக கொண்டாடுவது வழக்கம். ஆடி முதல் தேதி வீடுகளில் அசைவம் சமைக்கப்படும். எனவே அந்த மாதம் பிறப்பிற்கு முந்தைய சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை களைகட்டும்.சந்தைக்கு அனுமதி இல்லாத போதும் திருப்புவனம் நான்கு வழிச்சாலையில் நேற்று நடந்த சந்தையில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனையாகின. 10 கிலோ எடை கொண்ட ஆடு 4 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாய் என விற்பனையானது. நான்கு வழிச்சாலையில் சந்தை நடந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதித்தது. எனவே சந்தையை அதற்குரிய இடத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: