அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு ஒன்றிய அமைச்சர் பதவி கேட்டு மகனுக்காக தூதுவிடும் ஓபிஎஸ்: அதிமுக எம்பிக்கள் ரவீந்திரநாத், தம்பிதுரைக்கு இடையே கடும் போட்டி

சென்னை: ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் ஓபிஎஸ் தனது மகனும் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத்துக்கு ஒன்றிய அமைச்சர் பதவியை பெறுவதற்காக பாஜ மேலிட தலைவர்களுக்கு தூது விட்டு வரும் தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் தம்பிதுரையும் இப்பதவிக்காக டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இணைந்து போட்டியிட்டது.

அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியடைந்தது. தமிழகத்திலிருந்து  அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மட்டுமே அக்கூட்டணியில் வெற்றி  பெற்றிருந்தார். எனவே, அவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அப்போதே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் காரணமாக தமிழகத்துக்கு ஒன்றிய அமைச்சர் பதவியை வழங்குவதில்  ஒன்றிய பாஜ அரசுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் இடம் காலியாக இருக்கிறது. 57 அமைச்சர்கள் மட்டுமே உள்ளனர். இந்த காலியிடங்களை நிரப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கையில் பிரதமர் மோடி தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒன்றிய அமைச்சரவை ஓரிரு நாளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுகவின் ராஜ்ய சபா எம்பி தம்பிதுரை, அதிமுக நாடாளுமன்ற எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் அமைச்சர்களுக்கான போட்டியில் குதித்துள்ளனர். வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், தற்போது இந்த இருவருக்கும் இடையே மத்திய அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ரவீந்திரநாத் கடந்த சில மாதங்களாகவே மத்திய அமைச்சர் ஆகும் முயற்சியில் பாஜ மேலிடத்தில் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

அதாவது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி கட்சியான பாஜ மூலம் இதற்காக தீவிரமாக முயன்று வந்ததாக தகவல்கள் வந்துள்ளன. முக்கியமாக தமிழக பாஜ தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் நெருக்கமாக சென்றதும், இவர்கள் மூலமாக ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி பெறுவதற்காக டெல்லி மேலிடத்திற்கு தூது விட்டதாகவும் தகவல்கள் வந்தன. இதற்கிடையே, இன்னொரு ராஜ்ய சபா எம்பியான தம்பிதுரையும், டெல்லியிலேயே கடந்த சில நாட்களாக தங்கி அமைச்சர் பதவிக்கு முயன்றதாக தகவல்கள் வந்தன. தனக்கு நெருக்கமான சில பாஜ தலைவர்கள் மூலம் மேலிடத்தில் அமைச்சர் பதவியை பெற காய் நகர்த்திய தகவலும் வெளியாகியுள்ளது.

ஆனால் பாஜ தலைவர்கள் பலரும், ‘எங்கள் கையில் முடிவு இல்லை, கட்சியின் மூத்த தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுக்க போகிறார்கள், அவர்களின் ஆலோசனையே இன்னும் முடியவில்லை, எங்கள் சிபாரிசு எல்லாம் வேலைக்கு ஆகாது’ என்று கூறி கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத்துக்கு தான் மத்திய அமைச்சர் பதவி தர வேண்டும் என்று பாஜ மேலிடத்துக்கு ஓபிஎஸ் தூதுவிட்டு வருகிறார்.

ஆனாலும் பாஜ மேலிடமோ விரிவாக்கப்பட உள்ள அமைச்சர்களின் பட்டியலை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதனால் அதிமுகவுக்கு பெரிய அளவில் மரியாதை கொடுக்க வேண்டியது இல்லை என்று பாஜ முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. இதனால் மோடி தயாரித்துள்ள அமைச்சரவை பட்டியலில் யாருக்கு இடம் உள்ளது என்பது சஸ்பென்ஸ்சாக உள்ளது.

* சினிமாவை மிஞ்சும் அரசியல் ‘டிவிஸ்ட்’

தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத். எனவே, தன் மகனை ஒன்றிய அமைச்சராக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தீவிரமாக இறங்கினார். ஆனால், அதை தடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ராஜ்யசபா எம்பியான வைத்திலிங்கத்தை தூண்டி விட்டு ஒன்றிய அமைச்சர் பதவியை கேட்டு டெல்லிக்கு அழுத்தம் கொடுக்க வைத்தார். இந்த இருவரில் யாராவது ஒருவருக்கு ஒன்றிய  அமைச்சர் பதவியை தருவதாக பாஜ மேலிடம் உறுதி அளித்தது. ஆனால் இருவரும் அப்பதவியை கேட்டு அடம் பிடித்த விவகாரம் பாஜ தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

இதனால் பாஜ மூத்த தலைவர்கள் அதிமுக முக்கிய நிர்வாகிகளை அழைத்து இப்பிரச்னையை பேசி தீர்த்து விட்டு யாராவது ஒருவரை தேர்வு செய்யுங்கள் என்றனர். ஆனாலும் ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே இந்த விவகாரத்தில் கடைசி வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த யாரும் ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெறவில்லை. அதன் பின்பு ராஜ்யசபா எம்பிக்களான கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும் மத்திய அமைச்சர் பதவி கேட்டு காய் நகர்த்தி வந்ததால் அதிமுகவில் கோஷ்டி பூசல்  வெடித்தது.

Related Stories: