சிறையில் இறந்த ஸ்டான் ஸ்வாமியின் உடலை பார்க்க முடியவில்லையே... திருச்சியில் வசிக்கும் சகோதரர் உருக்கம்

திருச்சி: ஜார்க்கண்ட் மாநில பழங்குடியினருக்காக குரல் கொடுத்தவர் ஸ்டான் ஸ்வாமி. ராஞ்சியில் ஆதிவாசி மற்றும் பழங்குடியின மக்களுக்கு சேவை செய்து வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், ஸ்டான் ஸ்வாமி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் பாந்த்ராவில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டான் ஸ்வாமி, நேற்றுமுன்தினம் மதியம் இறந்தார். ஸ்டான் ஸ்வாமியின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே உள்ள விரகாலூர். லூர்துசாமி- கிப்பேரிம்மாள் தம்பதிக்கு 5வது மகனாக 1937 ஏப்ரல் 26ம்தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்தனிஸ் லாஸ் லூர்துசாமி. இவருக்கு 3 சகோதரிகள், 2 சகோதரர்கள் உள்ளனர்.

ஸ்டான்ஸ்வாமி, 1 முதல் 5ம் வகுப்பு வரை விரகாலூர் செயின்ட் பீட்டர் பள்ளியிலும், 6ம் வகுப்பிலிருந்து பியுசி வரை திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும் படித்தார்.திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஏ வரலாறு பட்டம் பெற்றார். 1957 மே 30ம் தேதி துறவி ஆனார். பின்னர் 1970 ஏப்ரல் 14ம் தேதி பாதிரியாராக பதவியேற்றார். 15 வருடம் பெங்களூர் சமூக கல்வி நிறுவனத்தில் பணியாற்றினார். அதன்பின்னர் 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று ஆதிவாசி மக்களுக்காகப் போராடி உள்ளார்.

இது குறித்து லால்குடியில் உள்ள ஸ்டான் சுவாமியின் மூத்த சகோதரர் இருதயசாமி (90) கூறியதாவது: 20 வயதில் ஸ்டான் ஸ்வாமி வீட்டை விட்டு சென்றார். 3 வருடத்துக்கு ஒரு முறை திருச்சி வரும்போது வீட்டிற்கு வந்து 2 நாட்கள் தங்கி விட்டு செல்வார். குடும்பத்தின் சுக, துக்க நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மாட்டார். சிறு வயது முதலே சமூக சேவையில் ஈடுபாடு மிகுந்ததால் தனது குடும்பம் என்று நினைத்ததே இல்லை. மக்களுக்கு சேவை செய்ததால் எங்களுக்கும் பெருமையாக இருந்தது. அவரை பார்த்து பல ஆண்டுகளாகிறது. தற்போது இறந்துவிட்டார். அவரது உடலை பார்க்க கூட எங்களால் முடியவில்லை. மிகவும் வேதனையாக உள்ளது. இங்குள்ள கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றார்.

Related Stories: