சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இந்த நிகழ்வின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும், ஆனி திருமஞ்சன திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டுத்தலங்கள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முதல் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் திருவிழாக்கள் மற்றும் கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்துவதற்காக தீட்சிதர்கள் சார்பில் ஏற்கனவே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு இருந்தது.நேற்று மாலை சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆனித் திருமஞ்சன திருவிழா நடத்த அனுமதி கோரினர்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில்களில் திருவிழா நடத்த தடை உள்ளதால் ஆனித் திருமஞ்சன திருவிழா நடத்த கலெக்டர் அனுமதி மறுத்தார். இதையடுத்து கோயில் தீட்சிதர்கள் மற்ற தீட்சிதர்களுடன் ஆலோசனை செய்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதாக கூறி விட்டு சென்றனர். இதையடுத்து இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது கோயில் தீட்சிதர்கள் மட்டுமே உள்ளே இருந்தனர்.

பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. கொடியேற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் கோயில் உள்ளே சென்று கொடி மரத்தை வணங்கி விட்டு, பின்பு சாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா நடத்த கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில், இன்று கோயிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் வருகிற 14ம் தேதி தேரோட்டமும், 15ம் தேதி ஆனித் திருமஞ்சன தரிசனமும் நடைபெறுமா? இதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related Stories: