பதவியேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூர் வருகை: ரூ10.50 கோடியில் கட்டிய மகப்பேறு மையம் திறப்பு

திருச்சி: பதவி ஏற்ற பின் முதன்முறையாக திருவாரூருக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அரசு மருத்துவமனையில் ரூ.10.50 கோடியில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மே 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது கொரோனா 2வது அலை பரவல் காரணமாக மாவட்டம் முழுவதும் சிறப்பு கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மே 21ம் தேதி திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவமனை, கலையரங்கம் திருமண மண்டபம், என்ஐடியில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு மையங்களை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 11ம் தேதி மீண்டும் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்லணை மற்றும் தஞ்சையில் நடந்து முடிந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்நிலையில், 2 நாள் நிகழ்ச்சியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் நாளை (6ம் தேதி) மாலை 6 மணிக்கு திருச்சி வருகிறார்.

விமான நிலையத்தில் முதல்வரை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் சிவராசு, போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் வரவேற்கின்றனர். இந்த வரவேற்பை தொடர்ந்து, திருச்சியில் இருந்து காரில் திருவாரூர் புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் இரவு விளமலில் உள்ள அரசு ஆய்வு மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள்(7ம் தேதி) காலை 10 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.10.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்படும் முதல்வர் திருக்குவளை சென்று அங்குள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், அங்குள்ள நூலகத்தை பார்வையிடுகிறார்.  

இதனைத்தொடர்ந்து திருவெண்காடு சென்று அங்கு ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை அங்கிருந்து காரில் புதுச்சேரி வழியாக சென்னைக்கு செல்கிறார். முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த ஊரான திருவாரூருக்கு வருகை தருவதால் அம்மாவட்ட மக்கள், திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Stories: