சிறுவாபுரி முருகன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் அகற்றம்

ஊத்துக்கோட்டை: சிறுவாபுரி முருகன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கடைகள், வீடுகள் அகற்றப்பட்டன. பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் சிறுவாபுரி கிராமத்தில் புகழ் பெற்ற  முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய்க்கிழமை, கிருத்திகை ஆகிய நாட்களில் 30 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வரும் பக்தர்கள்  திருமண தடை, வீடு கட்டுதல், புத்திர பாக்கியம் போன்ற பல்வேறு வேண்டுதலுக்காகவும், ஆடி கிருத்திகையில் பால் குடம் எடுப்பது,  காவடி எடுப்பது, மற்ற நாட்களில்   இக்கோயிலுக்கு வந்து விளக்கு ஏற்றியும், பிரசாதம் வழங்கியும், அர்ச்சனை செய்தும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.

பக்தர்கள் பஸ் , வேன். கார் போன்ற வாகனங்களில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் சாலையோர கடைகள் ஆகும். போக்குவரத்து நெரிசலால் பொதுமக்களும் , பக்தர்களும் கடும் அவதிப்பட்டனர். இதனால் கோயில் அருகில் சாலையை ஆக்ரமித்து உள்ள தேங்கா,  பூமாலை கடைகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்திரவின்பேரில் பொன்னேரி ஆர்டிஒ மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆகியோர் சிறுவாபுரி முருகன் கோயில் அருகில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த 150 க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை அகற்றினர்.

இதில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையில் 100 கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறமும் 30 அடி அகலத்திற்கு ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது.  இதனால் சிறுவாபுரி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள கடைகாரர்கள்  மாற்று இடம் வழங்கவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதை கேட்ட அதிகாரிகள் மாற்று இடம் ஒதுக்குவதாக தெரிவித்தனர்.

Related Stories: