தமிழகத்தில் முதல்முறையாக பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்திலேயே முதல் முறையாக கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து திட்டக்குடி பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, வெலிங்டன் நீர்த்தேக்கத்தை பார்வையிட்டார். பின்னர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணியை மேற்கொண்டார். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை கோடியை தாண்டியுள்ளது. இதுவரை தமிழகத்திற்கு ஒரு கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 550 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் நேற்று முன்தினம் இரவு வரை செலுத்தி கொண்ட பயனாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 52 லட்சத்து 785 ஆகும். 6 லட்சத்து 41 ஆயிரத்து 220 கையிருப்பில் உள்ளது. மேலும் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெண்ணாடத்தில், கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இந்த பணியை பெண்ணாடம் பகுதியில் தொடங்கி வைத்து இருக்கிறார். தமிழகத்திலேயே கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதலில் தொடங்கி வைத்த இடமாக பெண்ணாடம் பகுதி இருக்கிறது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: