ஆவினில் பணப்பட்டுவாடா வழங்கும் ஏஜென்ட் முறை ரத்து ஆண்டுக்கு ரூ.15.39 கோடி இழப்பு தவிர்ப்பு: தமிழக அரசின் அதிரடி தொடர்கிறது

சென்னை: ஆவின் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.15.39 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதால், பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா வழங்க சி மற்றும் எப் ஏஜென்ட் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் 90ம் ஆண்டுகளில் மொத்த விற்பனையாளர்களை அறிமுகப்படுத்தியது. அவர்களுக்கு கமிஷனாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 பைசா எனவும் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.1 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் 2015-2019ம் ஆண்டுகளில் மொத்த விற்பனையாளர்கள் மூலமாக மட்டும் 4 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. மேலும் 51 மொத்த விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்பு மொத்த விற்பனையாளர்கள் பால் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் வளர்ந்து வரும் தனியார் நிறுவன மொத்த விற்பனையாளர்களுக்கு இணையாக இவர்களால் விற்பனையை பெருக்க இயலவில்லை. இதனால் 2019ம் ஆண்டு கொள்முதல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் விற்பனையை உடனடியாக உயர்த்தும் நோக்கில் சி மற்றும் எப் (கிளினிங் அன்ட் பார்வேர்டிங்) ஏஜென்ட் என்ற புதிய நடைமுறையை இணையம் முன்னெடுத்தது. எனவே 51 மொத்த விற்பனையாளர்களில் இருந்து திறமையாக விற்பனை செய்த 11 மொத்த விற்பனையார்கள் சி மற்றும் எப் ஏஜென்ட் ஆக ஆவின் நிர்வாகம் தேர்வு செய்தது.

மேலும் இவர்களுக்கு நாளொன்றுக்கு 6 லட்சம் லிட்டர் பால் என்ற அளவில் விற்பனை இலக்கு நிர்ணயித்தும் மற்றும் சென்னையை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் மொத்த விற்பனையாளர்களை நியமித்து விற்பனையை விரிவாக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இவர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு 75 பைசா கமிஷன் தொகை வழங்கப்பட்டது. இதனால் இணையத்திற்கு ஒரு வருடத்திற்கு சுமார் ரூ.15.39 கோடி அதிகப்படியான நிதி செலவு ஏற்படுகிறது. ஓராண்டுக்கு பின்னர் 11 சி மற்றும் எப் ஏஜென்டுகளும் சேர்ந்து 5.20 லிட்டர் வரை விற்பனை செய்தனர் மற்றும் விலை குறைப்புக்கு பின்பும் 5.70 லிட்டர் மட்டுமே பால் விற்பனை செய்தனர் மற்றும் எவ்வித விற்பனை விரிவாக்கமும் மேற்கொள்ளவில்லை.

ஓராண்டு கடந்தும் இவர்களது விற்பனையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை மற்றும் இவர்கள் விற்பனை உயர்த்தும் விதமாக எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. எனவே ஆவினின் நிதி நிலையை கருத்தில் கொண்டு மேற்கண்ட கூடுதல் செலவினை தடுக்கவும் மற்றம் அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய நேரத்தில் பால் பண பட்டுவாடா வழங்கவும், சி மற்றும் எப் ஏஜென்ட் முறையை ரத்து செய்து மொத்த விற்பனையாளர் மூலமாகவே விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: