கோவை அருகே பரபரப்பு: கொரோனா தடுப்பூசி போட மறுத்து மரத்தில் ஏறி போக்குகாட்டிய மக்கள்

கோவை: கோவையில் பாதிப்பு குறைக்க நகர் பகுதிக்கு இணையாக கிராமப்புறங்களிலும் கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் சுகாதாரத்துறையினர் நேரடியாக சென்று சிறப்பு முகாம் ஏற்படுத்தி தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் பூரத்திபதி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலை கிராமத்திற்கு 500 தடுப்பூசிகளுடன் சுகாதாரத்துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று சென்றனர்.

சர்க்கார் பூரத்திபதி கிராமத்திற்குள் நுழைந்த அதிகாரிகளை பார்த்த கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சிலர் தோட்டப்பகுதிகளுக்கு சென்று மறைந்து கொண்டனர். இளைஞர்கள் மரத்தில் ஏறி கொண்டனர். அவர்களை கீழே வர அதிகாரிகள் பல முறை கூறியும் அவர்கள் வர முடியாது என கூறிவிட்டனர். ‘‘எங்களுக்கு ஒன்னும் வராது. தடுப்பூசி எல்லாம் போட முடியாது’’ என அதிகாரிகளுடன் முதியவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கல்கொத்திபதியில் 57 பேரும், சர்க்கார் பூரத்திபதியில் 90 பேரில் 7 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இதையடுத்து மருத்துவர்கள், செவிலியர்கள் கிராம மக்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். பின்னர், நீண்ட நேரம் காத்திருந்த அதிகாரிகள் அங்கிருந்து அருகே உள்ள மற்ற பழங்குடி கிராமங்களிலும் சென்றனர். அங்கும், இதே நிலை தான் நீடித்தது. இதனால் கிராம மக்களுக்கு தடுப்பூசி போட சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories: