தொற்று குறைந்து வருவதால் சேலத்தில் 3 கொரோனா மையங்கள் மூடல்: நோயாளிகளின்றி வார்டுகள் வெறிச்

சேலம்:  சேலத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இதனால் மூன்று கொரோனா மையங்கள் மூடப்பட்டது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா 2வது அலை தாக்கியது. இதனால் நாள் ஒன்றுக்கு பல நூறு பேர் பாதிக்கப்பட்டனர். இறப்பு எண்ணிக்கையும்  அதிகரிக்க தொடங்கியது. கொரோனா ெதாற்றை கட்டுப்படுத்தும் வகையில் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனையுடன் கூடிய  கொரோனா மையம் அமைக்கப்பட்டது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கையும், சாதாரண படுக்கையும் அமைக்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்த காரணத்தால், சேலம் காந்தி ஸ்டேடியம், மெய்யனூர் சட்டக்கல்லூரி, பொன்னம்மாப்பேட்டை ஐஐஹெச்டி, சேலம் மகளிர் கல்லூரி விடுதி, சோனா கல்லூரி, சேலம் இரும்பாலை உள்பட 8 இடங்களில் கொரோனா மையங்கள் அமைக்கப்பட்டது. இதில் இரும்பாலை தவிர மற்ற இடங்களில் ஆக்சிஜன் வசதி இல்லை. மற்ற இடங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா ெதாற்று வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா உள்பட பல மாநிலங்களில் முழு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அங்கு பொது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதேவேளையில் கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்பட ஒரு சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களை தவிர்த்து  சேலம், கோவை உள்பட 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றும் வேகமாக குறைந்து வருகிறது. நேற்றுமுன்தினம் சேலம் மாவட்டத்தில் 279 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 492 பேர் குணமாகி வீடு திரும்பினர். 5 பேர் உயிரிழந்தனர். சேலம் மாநகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா மையங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் சரிந்து வருகிறது.

சேலம் சோனா கல்லூரியில் 106 படுக்கை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 57 படுக்கை காலியாக உள்ளது. 49 படுக்கையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மகளிர் கல்லூரி சித்தா மையத்தில் 220 படுக்கையில் 181 படுக்கை காலியாக உள்ளது. 39 படுக்கையில் நோயாளிகள் உள்ளனர். பொன்னம்மாப்பேட்டை ஐஐஹெச்டி.,யிலுள்ள 108 படுக்கையில் 103 படுக்கை காலியாகவும், 5 படுக்கையில் நோயாளிகள் உள்ளனர். மொத்தம் 3 மையங்களில் 434 படுக்கையில் 341 படுக்கை காலியாகவும், 93 படுக்கையில் நோயாளிகளும் உள்ளனர். அதே நேரத்தில் தொங்கும் பூங்கா, மெய்யனூர் சட்டக்கல்லூரி, சேலம் காந்தி ஸ்டேடியம் உள்ளிட்ட 3 இடங்களில் 420 படுக்கை இருந்தது. மூன்று மையங்களிலும் நோயாளிகள் வரத்து இல்லாததால் மூடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக கொரோனா தொற்று அதிகரிப்பால் பீதியில் இருந்த மக்களுக்கு, தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சியயை அளித்துள்ளது.

Related Stories: