முதல்வர் நிதிசுக்கு ஆதரவான அதிகாரிகள் சொத்து குவிப்பு; பீகாரில் சர்வாதிகார போக்கும் சித்ரவதையும் அதிகமாயிடுச்சு!.. பதவியை ராஜினாமா செய்வதாக அமைச்சர் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் சர்வதிகார போக்கும், சித்ரவதையும் அதிகமானதால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவரும், மாநில சமூக நலத்துறை அமைச்சருமான மதன் சாவ்னி, திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அதிகாரிகள் என்னுடைய பேச்சைக் கேட்பதில்லை. இப்படி இருக்கும் போது, நான் எப்படி பொதுமக்களுக்காக சேவை செய்வேன்.

இப்படியொரு நிலையில், நான் எதற்காக அமைச்சராக இருக்க வேண்டும்? அப்படி அந்த பதவியில் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அதனால், என்பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். முதல்வர் நிதிஷ்குமாருக்கு நெருக்கமான அதிகாரிகள், ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர். முதல்வருக்கு  நெருக்கமான அதிகாரி சஞ்சல் குமாரின் சொத்து குவிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும். கட்சியில் இருந்து விலகுவது குறித்து, இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. பல ஆண்டுகளாக சர்வாதிகார போக்கை எதிர்கொண்டு வருகிறோம். பல நிலைகளில் சித்ரவதைக்கு ஆளாகிறோம். இப்படியே பொறுத்துக் கொண்டு செல்ல முடியாது.

கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் பிரசாத், துறையில் உள்ள அமைச்சர்களின் எவரது பேச்சையும் கேட்பதில்லை. அரசு நிர்வாகத்தில் அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன. சமூக நலத்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். தன்னிச்சையாக பணிகளை செய்து வருகின்றனர். அதை அகற்றும்படி கூடுதல் தலைமைச் செயலாளர் கேட்டபோது, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார். சமூக நலத்துறை அமைச்சராகிய எனக்கு மட்டும் இந்த நிலை ஏற்படவில்லை. பல அமைச்சர்களும் இப்படித்தான் உள்ளனர்.

எந்தவொரு அதிகாரியும் அமைச்சர்களின் பேச்சுக்கும் செவிசாய்ப்பதில்லை’ என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சரே முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புகார் கூறி, பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: