திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றும் போதிய பஸ்கள் இயக்காததால் மக்கள் தவிப்பு-மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போதுமான பஸ்கள் இயக்காததால் தொடர்ந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்குகிறது. தனியார் நிறுவனங்களும் முழுமையாக செயல்பட தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், கொரோனா தொற்று குறைந்திருக்கும் திருவண்ணாமலை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கடந்த 28ம் தேதி முதல் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல ேவண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. அதனால், பயணிகள் கூட்டம் ஒவ்வொரு பஸ்சிலும் அலைமோதுகிறது. மதிய நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பஸ்களில் பயணிகள் நின்றபடி பயணிக்கும் நிலையே காணப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, தேவையான வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

எனவே, திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, ஆரணி, போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நேற்றும் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை காணப்பட்டது.  குறிப்பாக, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகளில் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையம் வந்தவர்கள் வெகுநேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

இயக்கப்பட்ட ஒருசில பஸ்களில் படியில் தொங்கியபடி பயணிக்கும் ஆபத்தான நிலை ஏற்பட்டது. மேலும், தனியார் பஸ்களும் முழுமையாக இயங்கவில்லை. ஒருசில வழித்தடங்களில் மட்டுமே தனியார் பஸ்கள் இயங்கியது. எனவே, அரசு பஸ்களை மட்டுமே பொதுமக்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள தளர்வின் காரணமாக, இனி வரும் நாட்களில் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பொதுமக்களின் வருகைக்கு தகுந்தபடி கூடுதல் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: