டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய கொடியை மாரியப்பன் தங்கவேலு ஏந்தி வருவார்..! இந்திய பாராலிம்பிக் குழு தகவல்

டெல்லி: டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய கொடியை மாரியப்பன் தங்கவேலு ஏந்தி வருவார் என இந்தியாவின் பாராலிம்பிக் குழு தகவல் தெரிவித்துள்ளது. 2016 ரியோவில் நடந்த பாராலிம்பிக்கில் ஆண்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் மரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா பரவலை முன்னிட்டு இ்ந்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

எனினும், இந்த ஆண்டும் அந்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறையாமல் உள்ளன. இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8ந்தேதி வரை நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டது.  பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 5ந்தேதி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய கொடியை மாரியப்பன் தங்கவேலு ஏந்தி வருவார் என இந்தியாவின் பாராலிம்பிக் குழு தகவல் தெரிவித்துள்ளது.

ரியோ 2016 விளையாட்டுப் போட்டிகளில், மரியப்பன் 1.89 மீட்டர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார். இது விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு முக்கிய தருணமாக அமைந்தது. அவரது சாதனையின் அடையாளமாக டோக்கியோ 2021 பாராலிம்பிக்கில் அவரை இந்தியாவின் கொடி ஏந்தியவராக்க இந்திய பாராலிம்பிக் குழு முடிவு செய்துள்ளது. விளையாட்டுக்கான தடகளத்தில் நான்கு பெண் விளையாட்டு வீரர்கள் உட்பட 24 வீரர்கள் அடங்கிய ஒரு வலுவான குழு இறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: