பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால் தாசில்தார் அலுவலக வாசலில் தாலியை தொங்கவிட்ட பெண்: தெலுங்கானாவில் பரபரப்பு

திருமலை: தங்களுக்கு சொந்தமான நிலத்தின் பட்டா மாற்றுவதற்காக லஞ்சம் கொடுக்க பணம் இல்லாததால், தாசில்தார் அலுவலக வாயிலில் தாலியை தொங்கவிட்ட பெண்ணால் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், ருத்ரங்கி மண்டலம், மணலா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேசம். இவரது மனைவி மங்கா. ராஜேசம் பெயரில் அதே கிராமத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதித்து இறந்தர். இவர் பெயரில் இருந்த நிலத்தை வேறு பெண்ணின் பெயருக்கு  தாசில்தார் பட்டா மாற்றி வழங்கினார். இதையறிந்த மங்கா, கடந்த 3 ஆண்டுகளாக தாசில்தார்  அலுவலகத்தில் தன் கணவர் மீது இருந்த நிலத்தை தன் பெயருக்கு மாற்றி பட்டா வழங்க வேண்டும் என கேட்டு வந்துள்ளார்.  

ஆனால், அதிகாரிகள் லஞ்சம் இல்லாமல் எந்த பணியும் செய்ய முடியாது என்று கூறிமறுத்துள்ளனர். இதையடுத்து மங்கா, தனது கணவர் இறந்ததால் அவர் கட்டிய தாலி மட்டுமே உள்ளது என கூறி தாலியை தாசில்தார்  அலுவலக ்அதிகாரிகளிடம் கொடுத்து, நிலத்தை தன் பெயருக்கு மாற்றி பட்டா வழங்கும்படி கேட்டுள்ளார். இதை பார்த்து பதறிய அதிகாரிகள் மங்காவிடம் தாலியை திருப்பி கொடுத்து விட்டு, பட்டாவை மாற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். அதன் பிறகும் பட்டா வழங்காததால் விரக்தி அடைந்த மங்கா, தாலியை தாசில்தார் அலுவலக வாசலில் தொங்கி வைத்து விட்டு வந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: